’ரஷ்யா-உக்ரைன் போருக்கான காரணங்களை சரியாக ஆராய வேண்டுமானால், இரண்டாம் உலக மகா யுத்தத்திலிருந்து வரலாறைத் தொடங்க வேண்டும். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்காவும், யு.எஸ்.எஸ்.ஆர்(USSR) (Union of Soviet Socialist Republics) -கும் ஓர் அணியில் இருந்தன. போருக்குப்பின் பல நாடுகள் கம்யூனிச நாடுகளாக மாறின. ஜெர்மனி இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனி USSR குடையின் கீழும் மேற்கு ஜெர்மனி USA யின் மேலாதிக்கத்தின் கீழும் வந்தன. உலகம் இரண்டு அணிகளாகப் பிரிந்து பல நாடுகள் NATO(North Atlantic Treaty
Organisation) அமைப்பிலும், அதற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட WARSAW (போலந்தின் தலைநகரின் பெயரில்) (போலந்து அன்று கம்யூனிச நாடாக இருந்தது) அமைப்பிலும் இணைந்தன. பனிப்போர் துவங்கியது. இது அனைத்துத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. விண்வெளி ஆகட்டும், போர்த்தளவாடங்களின் உற்பத்தியாகட்டும் என்று அனைத்திலும் இந்தப் பனிப்போரின் தாக்கம் இருந்தது. இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்ளவில்லையே தவிர,

1970-களில் நடந்த வியட்நாம் போரிலும், தென்-வடகொரியாக்களிடையே நடந்த (1950-53) போரிலும், இரண்டு நாடுகளும் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்ததோடு மட்டுமல்லாது, படைகளையும் ராணுவத்தளவாடங்களையும் அனுப்பி வைத்தன.

அமெரிக்கா பொருளாதாரத்தில் அசுர வளரச்சி அடைந்ததாலும், ஐரோப்பிய கூட்டமைப்புடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொண்டதாலும், தன்னுடைய அரசியல் செல்வாக்கையும் நிலை நிறுத்த விரும்பியது. 1969 முதல் 1974 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ரிச்சார்டு நிக்சன், இதுவரை தனிமைப்படுத்தபட்டிருந்த சீனாவை ’Ping Pong Diplomacy’ மூலம், உலக அரசியலின் மையத்திற்குக் கொண்டுவந்து, தைவானை ஐ.நா. பாதுகாப்பு சபையிலிருந்து நீக்கிவிட்டு பிரதான (Mainland) சீனாவை அங்கம் வகிக்கச் செய்தார். நிக்சன் அவ்வாறு செய்ததற்கு மிக முக்கியமாக இருந்தது, சீனா, அமெரிக்கப் பொருட்களின் பெருஞ்சந்தையாக அமையும் என்ற எண்ணத்தில்தான் என்றால் மிகையாகாது. மேலும்  அதிக மக்கள்தொகைக் கொண்ட ஒரு நாடு தனிமையில் இருப்பது உலக அமைதிக்கு உகந்ததல்ல என்றும் உணரப்பட்டது. அன்றிலிருந்து தனது கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து மெல்ல மெல்ல விலகி, இன்று சீனா பொருளாதாரத்திலும், இராணுவ பலத்திலும் அமெரிக்காவிற்கு சவால்விடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துவிட்டது. இதை ஏன் இங்கே கூற வேண்டி உள்ளதென்றால், வருங்காலங்களில், சீனா, தைவான் மீது போர் தொடுத்தால், அமெரிக்காவின் நிலை என்ன? உக்ரைன் போரின் போது விடும் அறைகூவல்கள் போலத்தான் அப்போதும் இருக்குமா?

ஜெர்மனிகள் இணைந்த ஓரிரு ஆண்டுகளில் USSR என்ற கூட்டமைப்பு 1991-இல், 15 நாடுகளாக உடைந்துவிட்டது. அதில் உக்ரைனும் ஒன்று. 20 ஆண்டுகளாக ரஷ்ய அதிபரின் மனதில் இந்த நிகழ்வுகளெல்லாம் நிழலாடத்தானே செய்யும். USSR உடைந்த பின்பு, WARSAW ஒப்பந்தத்தில் இணைந்திருந்த பல நாடுகள் NATO அமைப்பில் சேர்ந்துவிட்டன. உக்ரைனையும் உறுப்பினராக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பது உலகறிந்த விஷயம். உக்ரைன் என்பது ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் பாலம். இதன் வழியாகத்தான் நெப்போலியனும், ஹிட்லரும் ரஷ்யாவைத் தாக்கினர். கருங்கடல் வழியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக ரஷ்யா, தன்னிடமிருந்து பிரிந்த கிரிமியப் பகுதியை இணைத்துக்கொண்டது. போலந்து, ஹங்கேரி ரஷ்யாவின் பக்கம் இல்லை. உக்ரைன் தன்னை ஒரு நடுநிலை நாடாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மேலும் உக்ரைனின் ரஷ்ய எல்லையை ஒட்டிய பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் இனத்தவர் அதிகம் வாழ்கின்றனர். அவர்கள் உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக செயல்படவில்லை.

உக்ரைன் அதிபர் "விளாடிமிர் ஷெலன்ஷ்கி" என்ற யூதர், பெரிய அரசியல் பின்புலம் உள்ளவர் அல்ல. உக்ரைன் பிரச்சினை விஷ்வரூபம் எடுப்பதற்கு முதலடியாக, விளாடிமிர் புடின், உக்ரைனின் (ஏற்கனவே கிரிமியா 2014-இல் சேர்க்கப்பட்டுவிட்டது) Donetsk மற்றும் Luhansk என்ற இரண்டு பகுதிகளைத் தன்னாட்சிப் பகுதிகளாக ரஷ்யா அங்கீகாரம் செய்தது. கடந்த காலங்களில் சீன-ரஷ்ய உறவுகள் மேம்பட்டு தங்களை நட்பு நாடுகளாக வளர்த்துக் கொண்டன. ரஷ்யாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்ப அழைக்கப்பட்டுவிட்ட சூழ்நிலை வேறு. பாகிஸ்தான், ஈரான் நாடுகள் அமெரிக்காவுடன் வலுவான நட்புடன் இல்லை. NATO நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனியும் உள்ளார்ந்த நட்புடன் அந்த அமைப்பில் இருக்கவில்லை என்றே தெரிகிறது. அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் செய்துகொண்ட AUKUS  உடன்படிக்கையின் காரணமாக, ஆஸ்திரேலியாவிற்கு பிரான்ஸ் விநியோகம் செய்ய வேண்டியிருந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் சம்பந்தமான ஒப்பந்தம் ரத்தாகிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனி மீது திணிக்கப்பட்ட சில நிபந்தனைகளை ஜெர்மானியர்கள் அவ்வளவு எளிதாக மறப்பவர்கள் அல்லர். மேலும் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு விநியோகத்திற்காக குழாய் அமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இவையெல்லாம் ரஷ்யாவிற்கு சாதகமான சூழ்நிலைகளாக மாறிவிட்டன எனக் கூறலாம்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பனிப்போரின் உச்சகட்டத்தில் கூட, இந்தியா கூட்டுச்சேராக் கொள்கையை உருவாக்கிய சிற்பி நாடாக மட்டுமல்லாது, தனக்கென சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கைகளை வகுத்துக் கொண்டிருந்தது. இருந்தாலும் இந்தியா, ரஷ்யாவின் பக்கம் இலேசாக சாயிந்தே இருந்தது எனக் கூறலாம். இந்தச் சாய்வு, 1971-ஆம் ஆண்டு ’இந்தோ-சோவியத் அமைதி, நட்புறவு, கூட்டுறவு (Indo-Soviet Treaty of Peace, Friendship and Cooperation)’  உடன்படிக்கை மூலம், இந்தியா, சோவியத் யூனியனின் கூட்டு நாடாக மாறிவிட்டது. இந்த உடன்படிக்கைதான், பங்களாதேஷ் போரில் இந்தியாவிற்கு வெற்றியை சாத்தியமாக்கியது. காங்கிரஸ் ஆட்சிக்குப்பின் அமைந்த பல அரசுகளும், முக்கியமாக வாஜ்பாய் தலைமையின் கீழ் அமைந்த அரசும், சீனா, ரஷ்யாவோடு நல்ல நட்புடனே இருந்தன. தற்போதைய அரசு QUAD  போன்ற சில அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டதால், சீன, ரஷ்யா நாடுகளுடன் பகைமையை ஏற்படுத்தாவிட்டாலும் மிக நல்ல உறவில் இல்லை என்றே கூறலாம். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை, பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினைகள், தீவிரவாத ஊடுருவல்கள் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றங்கள் முதலியன இந்தியாவை எப்பொழுதும் பதற்றத்திலேயே வைத்துள்ளன. 1970-களில் இருந்த சீன ரஷ்ய உறவுகள் வேறு. காஷ்மீர் பிரச்சினை எப்பொழுதெல்லாம் UNO-இல் எழுப்பப்பட்டதோ அப்போதெல்லாம், அன்றைய USSR , இன்றைய ரஷ்யா இந்தியாவின் பக்கபலமாகவே இருந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்தியா எந்த மாதிரியான ராஜதந்திர முடிவுகளை எடுக்க வேண்டும். பிப்ரவரி 2022-இல் பாதுகாப்பு கவுன்சில் ஓட்டெடுப்பில், இந்தியா பங்கேற்கவில்லை. அதற்காக இரண்டு தரப்பும், நம்மை நட்பு நாடாகப் பார்க்கவில்லை என்றே கூறலாம். இந்தியாவிற்கு ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளின் நட்பும் தேவை. அதைவிட ஆசிய நாடுகளின் உறவு மிகத்தேவை. இந்த சர்வதேச சூழ்நிலையில், ஒருவேளை இந்திய-சீன அல்லது இந்திய பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை போர் மூளுமாயின், அமெரிக்காவும், ரஷ்யாவும் எந்த நிலைப்பாட்டை எடுக்கும்? இன்றைய சூழ்நிலையைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதா? அல்லது கண்டனம் செய்வதா? பெரிய கேள்விக்குறி.