16-ஆவது திதி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். வெள்ளம், வறட்சி போன்ற பேரிடர் மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடுகளை இந்த ஆணையம் மறுஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் பனகாரியா நிதிஆயோக்  துணைத் தலைவராக 2015 முதல் 2017

வரை பணியாற்றியவர். இந்திய அரசியல் சாசனத்தின் 250 (1) பிரிவில் கூறப்பட்டபடி மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வருவாயைப் பகிர்ந்தளிக்க பரிந்துரை அளிப்பது தொடர்பாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு நிதி ஆணையத்தை அமைக்கிறது. கடைசியாக அமைக்கப்பட்ட 15-ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கையின்கீழ் தற்போது மத்திய மாநில அரசுகளுக்கிடையே வரி பகிர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் 2026 - ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும்.

அரசியல் சாசனத்தில் (அத்தியாயம் 1, பகுதி 12-இன் கீழ்) பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்க நிதி ஆணையம் பரிந்துரை அளிக்க வேண்டும்.அத்தகைய வருவாயை மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.மத்திய மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் இந்திய ஒருங்கிணைந்த நிதியில் சேருகிறது. இதில் மாநிலங்களுக்கு மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு? அவற்றை எந்தெந்த நோக்கங்களுக்காக நிர்வகிக்க வேண்டும்? போன்றவற்றையும் இந்த ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்.

கடந்த 15-ஆவது நிதி ஆணையத்தின் தலைவராக என்.கே.சிங் இருந்தார். அவரது தலைமையிலான ஆணையம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 %  வழங்க பரிந்துரைத்தது. கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சதவீதம் தனியாக ஒதுக்கப்பட்டது. அரவிந்த் பனகாரியா தற்போது அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இந்தியப் பொருளாதார அரசியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.