அக்னிபாத் திட்டம்

இந்திய விமான படையில் அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தின் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்வுக்கு திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 2002-ம் ஆண்டு டிசம்பர் 26 அல்லது அதற்கு பிறகும், 2006-ம் ஆண்டு ஜூன் 26-ந் தேதிக்கு முன்பு பிறந்தவராக இருக்க வேண்டும்.

உடற்தகுதியில் ஆண்கள் 152.5 செ.மீ, பெண்கள் 152 செ.மீ உயரமும் இருத்தல் வேண்டும். இதற்கான தேர்வு எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை கொண்டுள்ளது. இதற்கான கல்வி தகுதிகள் அதிகாரபூர்வ விளம்பர அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31-ந் தேதி கடைசி நாள்

மேற்கூறிய உடற்தகுதி உடைய ஆர்வமுள்ள ஆண், பெண் இருவரும் agnipathvayu.cdac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 31-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஆகும்.

அக்னி வீரர்களுக்கான இணையவழி தேர்வு வருகிற மே மாதம் 20-ந் தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு சுமார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.

வழிகாட்டல் நிகழ்ச்சி

இத்திட்டம் குறித்த வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இ்ன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் 2-வது குறுக்கு தெரு பூம்புகார் சாலை, பாலாஜி நகர், மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04364-299790 என்ற தொலைப்பேசி எண்ணிற்கோ அல்லது 9499055904 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவோ தகவல் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.